முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் நேற்று ரத்தானது. அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ந்தேதி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார்.

இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட ஆயத்தமானார். சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் செயலாளர் உதயசந்திரன் ஆகியோரும் வந்தனர். இரவு 8.30 மணிக்கு டெல்லி நோக்கி புறப்படும் விமானத்துக்காக காத்திருந்தனர். இந்தநிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்பட தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தின் வி.ஐ.பி. அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காத்திருந்தார். இரவு 9.30 மணி தாண்டியும் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. மேலும் இன்னும் அதிக தாமதமாகும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து வீடு திரும்பினார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார்.