தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்காக அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்கா நகரில் நேற்று மதியம் பாஜக சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பட்டது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்துக் கொண்டிருந்த போது, திடீரென பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா கையை உயர்த்தி பயங்கரமாக சத்தம் போட்டார். பின்னர், மைக் அருகே சென்ற அவர், “யார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பியது.. இது கர்நாடகா.. கன்னட கீதத்தை போடுங்கள்” எனக் கூறி கடுமையாக திட்டினார். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தி, கன்னட கீதத்தை ஒலிக்கச் செய்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த போது, அண்ணாமலை மேடையில் நின்று கொண்டிருந்தார். எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டதற்கு அவர் எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை. கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் முன்பே தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த சூழலில், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்தப் பதிவில், “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுப்படுத்தும் தனது கட்சிக்காரர்களை கூட தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களை பற்றி எப்படி கவலைப்படுவார்? இதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்” என கனிமொழி கேள்வியெழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை, ஒரு பழைய வீடியோ க்ளிப்பை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றுகிறார். ஆனால், அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இந்த வீடியோவுக்கு கீழே, “நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் இருந்து நீக்கி மாநிலப் பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது” என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு பதிவில், “அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா செய்தார். தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், திமுகவினரின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.