தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம்: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம். தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதையெல்லாம் சொன்னோம். திமுகவின் 15 அமைச்சர்கள் இந்த இரண்டு வருடத்தில் தங்கள் துறைகள் மூலமாக எப்படியெல்லாம் ஊழல் செய்து இருக்கிறார்கள்.. எப்படி முறைகேடு செய்து இருக்கிறார்கள் என்று தொகுத்து கொடுத்து இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், இந்தியா என்பது எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு மொழிக்கு மட்டும் இல்லை. எனவே இது மிகவும் தவறானது. அண்ணாமலைக்காக சொல்லவில்லை. எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி.. தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கிறது என்றால் அதை முழுக்க பாடிய பிறகு அதன்பிறகு அவர்கள் மொழிப்பாடலை பாடலாம். ஆனால் பாடும் போது பாதியில் நிறுத்துவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதிமுக நிர்வாகிகளை ஓபிஎஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது பற்றி கேட்கிறீர்கள்.. அரசியலில் நாகரீகம் வேண்டும். பண்பாடு வேண்டும். யாராவது எங்கள் மீது கல் வீசினால்தான் எதிர்வினை ஆற்றுகிறோம். யார் விமர்சனம் வைக்கிறார்களோ.. அவர்கள் மீதுதான் நாங்கள் விமர்சனங்கள் வைப்போம். விமர்சனத்திற்கு தகுந்த மாதிரிதான் வைப்போம் அதைத்தாண்டி போக மாட்டோம். முதல்வராக இருந்தவர். பல பொறுப்புகளை வகித்த ஓபிஎஸ் நாகரீகம் அறிந்து பேச வேண்டும். ஓபிஎஸ் நடத்தியது மநாடு கிடையாது. பொதுக்கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.