பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒரு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது:-
இந்த விழாவிற்கு என்னை அழைத்த போது நான் கூறிய முதல் விஷயம் நான் தமிழகத்திலேயே இல்லை. குடும்பத்தோடு ஹைதராபாத்தில் தங்கியிருக்கிறேன். தெலுங்கில்தான் அதிக படம் நடித்து வருகிறேன். அதிமுகவில் நான் உறுப்பினரும் அல்ல. ஆனால் எனக்கு ஓட்டுரிமை வந்ததிலிருந்தே நான் அதிமுகவிற்குதான் ஓட்டு போட்டு வருகிறேன். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அவரது கட்சிக்கு ஒரே ஒரு முறை அவருக்கு வாக்களித்துள்ளேன். பெண் குழந்தைகள் கல்லூரி படிப்பைத் தொடங்குவதற்கான திட்டத்தை முதலில் தொடங்கி வைத்தவர் ஜெயலலிதா. தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம் போன்ற நலத்திட்டங்களை தொடக்கி வைத்தவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா தற்போது நலமுடன் இல்லை. அவர் தெய்வமாகிவிட்டார். அவரை நாம் தெய்வமாக வணங்க வேண்டும். கட்சியை பார்த்து நலத்திட்ட உதவிகள் வழங்காமல் தேவையை அறிந்து உதவி வழங்குவது அதிமுகவின் சித்தாந்தத்தில் உள்ளது.
மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என கட்சியை கடந்து நான் நிறைய விமர்சித்துள்ளேன். திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுவை வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை திமுக கட்சிக்காரர்களே விமர்சித்த பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் அந்த திட்டத்தை வாபஸ் பெறவில்லை. கடலில் பேனா சின்னம் வைப்பது பெரிது அல்ல. ஒவ்வொரு வீட்டில் பேனா பிடித்து குழந்தைகள் பள்ளிக் கூடம் போக வேண்டும். அதுதான் பெரிது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் நூலகங்கள் கட்ட வேண்டும். அதை விட்டு விட்டு திருவள்ளுவர் சிலையை விட ஒரு அடி அதிகமாக கடலில் பேனா சின்னம் வைக்கிறீர்கள். இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும். பேனா வைக்க இடமா இல்லை. உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என சொன்னது, அதுக்கு வங்கக் கடலில்தான் வைக்க வேண்டுமா.. அங்க எழுத கூட முடியாதே.. பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவ எதுக்கு வைக்கணும்.
ஓய்வில்லாமல் தொடர்ந்து 12 மணி நேரம் எப்படி தொழிலாளர்களால் வேலை பார்க்க முடியும். 4 நாட்கள் பட்டினியாக இருந்துவிட்டு மூன்று நாட்கள் சேர்த்து சாப்பிட முடியுமா, அது போல்தான் அரசாங்கத்தின் 12 மணி நேர வேலை திட்டம் உள்ளது. இது எப்படி சாதாரண மக்களுக்கு பயனளிக்கும்? இவ்வாறு கஸ்தூரி பேசினார்.