மக்களின் துயரங்களை கேட்பதற்கு பதிலாக தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர், மோடி தான் என்று பிரியங்கா காந்தி தாக்கி பேசினார்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், உப்பள்ளி-தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவதி சிவள்ளிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நேற்று பிரியங்கா காந்தி வந்திருந்தார். இதற்காக ஹெலிகாப்டரில் குந்துகோலுக்கு பிரியங்கா காந்தி வருகை தந்தார். ஹெலிபேட் பகுதியில் சுற்றி நின்ற மக்களை சந்தித்து, அவர்களுடன் கைகுலுக்கி பிரியங்கா காந்தி பேசினார். பின்னர் குந்துகோல் அருகே உப்பள்ளி-லட்சுமேஷ்வரா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஜி.எஸ்.எஸ். வித்யா பீட்டா வரை பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று குசுமாவதி சிவள்ளிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து பிரியங்கா காந்திக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அந்த ஊர்வலத்தின் போது பிரியங்கா காந்தி பேசியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவதியை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்துள்ளேன். மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 4 ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. எந்த பணிகளையும் பா.ஜனதாவினர் செய்யவில்லை. ஊழலில் ஈடுபடுவதை மட்டும் பா.ஜனதாவினர் குறிக்கோளாக வைத்திருந்தனர். தற்போது சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா தலைவர்கள் உங்களை பார்க்க வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகம் வளர்ச்சி அடையவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்காக தான் காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டையை வீடு, வீடாக வழங்கி வருகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை, 10 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தனர். மாநிலத்தில் 2½ லட்சம் வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் கர்நாடக மக்கள் மற்றும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடப்பதாகும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வாக்களியுங்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
பின்னர் அவர், நவலகுந்துவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்பட பல பிரதமர்களை பார்த்துள்ளேன். அவர்கள் மக்களின் துயரங்களை கேட்பார்கள். ஆனால் மக்களின் துயரங்களை கேட்பதற்கு பதிலாக தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர், மோடி தான். பா.ஜனதா அரசு மக்களையோ, அவர்களின் வாக்குகளையோ, ஆளும் மாநிலத்தையோ மதிப்பதில்லை. ஊழல் செய்தவர்களுக்கு தேர்தலில் பா.ஜனதாவில் டிக்கெட் கொடுத்துள்ளனர். ஆனால் நேர்மையானவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரையும், லிங்காயத் சமுதாயத்தையும் அக்கட்சி மதிக்கவில்லை. மக்களை மதிக்காத கட்சி நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நல்லது இல்லை. அரசியல்வாதிகள் தங்களை தலைவர்களாக்குவது மக்கள்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். கர்நாடகத்தில் ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், பள்ளி நிர்வாகம், ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள் ஊழல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியும் எதுவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.