த.மா.கா. இளைஞரணி அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது: ஜி.கே.வாசன்

தானியங்கி மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமண நிகழ்ச்சிகளிலும், விளையாட்டு அரங்கங்களிலும், மனமகிழ் மன்றங்களிலும், சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும், அரசின் அனுமதியுடன் மது விற்கலாம் என்று அரசு அறிவித்தது. பின்னர் த.மா.கா. உள்பட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அந்த திட்டத்தை அரசு கைவிட்டதாக அறிவித்தது. அதேவேளை சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மது விற்பனை தொடரும் என்று அறிவித்ததை எதிர்க்கிறோம்.

இந்த நிலையில் தற்போது வெவ்வேறு ரூபத்தில் மது விற்பனையை அரசு தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு சி.எம்.பி.டி. பஸ் நிலையத்தில் தானியங்கி எந்திரம் மூலம் மது விற்பனையை தொடங்கியுள்ளது. இச்செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லும் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. தானியங்கி எந்திரம் மூலம் மது விற்பனையை தொடங்கியுள்ள தமிழக அரசின், இந்த பிற்போக்கான திட்டத்தை எதிர்த்து த.மா.கா. இளைஞரணி அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.