மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது!

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிறன்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ பட்டத்தரிசியாக முடிசூட்டிக்கொண்டு வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மீனாட்சி அம்மன்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8ஆம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சந்நிதியிலுள்ள 6 கால் பீடத்தில் இரவு 7.30 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்கள் இழைத்த செங்கோலை வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல், கோயில் துணை ஆணையர் ஆ.அருணாச்சலத்திடம் வழங்கப்பட்டது. செங்கோலைப் பெற்றுக்கொண்ட அவர், சுவாமி சந்நிதி 2ஆம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் ஒப்படைத்தார். பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அந்தக் காலத்தில் பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று வேப்பம் பூ மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு அம்மன் கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்பட்டது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்ததை அடுத்து சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கியுள்ளது. பட்டத்து அரசி மீனாட்சி இரவு 9 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று திக்விஜயம் நடைபெறும். நாளைய தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நாளை மறுநாள் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

மதுரையின் அரசி மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருமணம் என்றால் சும்மாவா? மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றவுடன் மதுரை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டுள்ளனர். மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பற்றிய புராண கதையை படித்தாலோ மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்தாலோ திருமண யோகம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை. பட்டத்தரசியாக முடிசூட்டிக்கொண்ட உடன் எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணம் வந்தது. ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்தார். அதன்படியே கயிலாயத்தில் இருந்து மதுரைக்கு வந்தார். மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக மதுரை மாப்பிள்ளையாக வந்தார். நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்து கொடுப்பது வரலாறாக இருந்து வருகிறது. இதனையொட்டி மீனாட்சி அம்மன் அருளாட்சி புரியும் மதுரைக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து இன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேளதாளங்கள் முழங்க பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு வருகிறார். திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான், தெய்வானையுடன் புறப்பட்டு அம்மை அப்பன் திருமணத்தில் பங்கேற்க வருகிறார். திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமான் தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாளை வழிபடுகின்றனர். நாளைய தினம் காலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்கிறார். மீனாட்சி அம்மனுக்கும் பிரியாவிடைக்கும் சுந்தரேஸ்வரர் மங்கல நாண் பூட்ட அதை பார்த்த மகிழ்ச்சியில் மதுரையில் உள்ள சுமங்கலி பெண்களும் தங்களின் கழுத்தில் புதுதாலி மாற்றிக்கொள்வது வழக்கமாகும். திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானையுடனும் மாமா பவளக்கனிவாய் பெருமாளுடனும் மதுரையில் 5ஆம் தேதி வரை தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகரும் வைகையில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.