தெலங்கானாவில் புதிய தலைமை செயலகத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.
தெலங்கானா மாநில அரசு, ஐதராபாத்தில் பிரமாண்டமான தலைமை செயலகத்தை கட்டியுள்ளது. அதற்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமைச் செயலகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று திறந்து வைத்து, தனது அலுவலக அறையில் பணியை தொடங்கினார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:-
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஆட்சியாளர்களால் தெலங்கானாவில் பல அழிவுகள் ஏற்பட்டது. தெலங்கானா ஒரு காலத்தில் பின்தங்கிய பகுதியாக இருந்தது. தனி தெலங்கானா மாநிலம் ஏற்பட்ட பின் அம்பேத்கர் போதித்த வழியில் தெலங்கானாவில் ஆட்சி தொடர்கிறது. காக்கித்தியர்கள் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட ஏரி, குளங்கள், அழிந்து போன நிலையில் அவற்றைப் புனர் நிர்மாணம் செய்து காலேஸ்வரம், பாலமூறு நீரேற்று திட்டம் உள்ளிட்டவை செய்ததன் மூலம் அப்போது வறண்ட பூமியாக இருந்தவை, இப்போது வயல்களில் பசுமையாகவும் வறண்ட பூமியில் தண்ணீர் நிறைந்தும் காணப்படுகிறது. பாலமூறு கிராமங்களில் உள்ளவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வெளிமாநிலங்களில் பணிக்கு சென்றகாலம் மாறி, அவரவர் ஊர்களில் பாலமுறு இளைஞர்கள் திரும்பி குடும்பத்துடன் வாழ்கிறார்கள். இதுவும் தெலங்கானாவின் மறுசீரமைப்புதான்.
தற்போது தெலங்கானாவின் முன்னேற்றம் அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது. தலைமை செயலகம் என்பது தெலங்கானா நிர்வாகத்தின் இதயம். இந்த புதிய செயலகம் தொடங்குவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தெலங்கானா வளர்ச்சியை பொறுத்து கொள்ளாமல் சிலர் பேசும் வார்த்தைகளை கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நடைமுறை கொள்கைகளுடன் 33 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன் நாம் முன்னேறி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.