தஞ்சை மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது: சசிகலா கண்டனம்!

தஞ்சை மாவட்டம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில், முகத்துவாரத்தில் உள்ள வாய்க்கால்களில் மணலை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்திட வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.

தமிழகத்தின் அனைத்து மீனவ கிராமங்களில் உள்ள முகத்துவாரங்களையும் ஆய்வு செய்து தேவையான இடங்களில் உடனே சரிசெய்திட வேண்டும் என்று சசிகலா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, ராஜாமடம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கீழத்தோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் முகத்துவாரத்தில் உள்ள வாய்க்கால்களில் உள்ள மணல் திட்டுக்களை தூர்வாராமல் அப்பகுதி மீனவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் இப்பகுதி மீனவர்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சை மாவட்டம், கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு 250க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. மேலும், கடற்கரையில் இருந்து கீழத்தோட்டம் கிராமத்திற்குள் படகுகள் வந்து போகக்கூடிய வாய்க்கால்களில் உள்ள மணலை தூர் வார வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இதே பணிகளுக்காக டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களோ மணலை தூர் வாராமலேயே பணிகள் முடிவடைந்துவிட்டது என்று கூறிவிட்டதாக தெரியவருகிறது. ஆனால், இதை இன்றைய ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளாமல் மீனவர்களுக்கு துரோகத்தை இழைப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இங்குள்ள முகத்துவாரங்களில் உள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்தாததினால் படகுகள் கிராமத்திற்குள் வந்து போக வழி இல்லாமல் இப்பகுதி மீனவர்கள் அனைவரும் தொழில் செய்ய முடியாமல் முடங்கிக் கிடப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடற்சார் மாநிலமான தமிழகம் சுமார் 1,076 கி.மீ நீளமுடைய கடற்கரையை கொண்டுள்ளது. மேலும் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரமே இந்த மீனவ தொழிலை நம்பி தான் இருக்கிறது.

எனவே இந்த ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் பேனா சின்னம் அமைத்து என்ன பயன்? திமுக தலைமையிலான அரசு மீனவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், யாருக்கும் பயனளிக்காத பேனா சின்னம் அமைப்பதற்கு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறுவதில் தான் முழு அரசு இயந்திரமும் இன்றைக்கு பணியாற்றிக்கொண்டு இருக்கிறது. இதற்காகவா இந்த மக்கள் வாக்களித்தனர்?

எனவே திமுக தலைமையிலான அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்டம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில், முகத்துவாரத்தில் உள்ள வாய்க்கால்களில் மணலை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்திட வேண்டும். அதேபோன்று தமிழகத்தின் அனைத்து மீனவ கிராமங்களில் உள்ள முகத்துவாரங்களையும் ஆய்வு செய்து தேவையான இடங்களில் உடனே சரிசெய்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.