பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு மா.சுப்பிரமணியன் அழைப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு சென்று சந்தித்தார். கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வந்ததாக மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழா குறித்தும் பேசப்பட்டது. அமைச்சரவையில் புதிதாக இருவரை சேர்க்க உள்ளதாகவும், சிறப்பாக செயல்படாத இரு அமைச்சர்களின் பதவிகளை பறிக்க உள்ளதாகவும் கோட்டை வட்டாரத்திலிருந்து தகவல்கள் பரவிய நிலையில் நேற்று இரவே திடீரென அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆளுநரை சந்தித்ததால் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன் இது குறித்து விளக்கம் அளித்தார். கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வந்ததாக மா.சுப்பிரமணியன் கூறினார். ஆளுநரும் நிகழ்வுக்கு வருவதாக உறுதியளித்துள்ளதாக கூறினார். ஆளுநருடனான சந்திப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் வேறு எந்த காரணமும் இல்லை, விழாவுக்கு அழைக்கவே வந்தோம் என்று கூறினார்.

முன்னதாக கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை திறப்பதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைத்தார். குடியரசு தலைவரும் மருத்துவமனையை திறக்க ஒப்புதல் அளிக்க ஜூன் 5ஆம் தேதி திறப்பு விழாவை நடத்த முடிவானது. அன்று மாலை நந்தனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் குடியரசு தலைவர் கலந்து கொள்ள உள்ளார்.

கிண்டியில் கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமையப்பெற்றுள்ளது. ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை என வட சென்னைப் பகுதிகளில் பல மருத்துவமனைகள் உள்ள நிலையில் தென் சென்னை மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது.