பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

போலீஸ் கஸ்டடியில் டார்ச்சர், அதன் தொடர்ச்சியாக ஏற்படும் மரணங்கள் தொடர் கதையாகி வருகின்றன. எந்த அரசு வந்தாலும் கஸ்டடி சர்ச்சைகள் மட்டும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் பல்வீர் சிங் ஐபிஎஸ். நெல்லையில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ராஜஸ்தானை சேர்ந்த இவர், 2020ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணை மண்டலத்தில் பயிற்சி ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிரம் காட்டினார். மூன்றே மாதங்களில் 200 கிலோ அளவிற்கு போதைப் பொருட்களை கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.

இந்த சூழலில் தான் சிக்கல் எழுந்தது. ராஜஸ்தான் காவல்துறையில் பணியாற்றி வரும் மாமாவின் ஸ்டைலை கையிலெடுத்துள்ளார். அதாவது விசாரணை கைதிகளிடம் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்திருக்கிறார். இதன்மூலம் உண்மையை வெளிக்கொண்டு வர திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த விஷயம் பல்வீர் சிங்கிற்கே எதிராக திரும்பி பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டுள்ளது. ஒருமுறை இரண்டு முறை டார்ச்சர் செய்யவில்லை. சுமார் 4 மாதங்களாக இத்தகைய சித்ரவதைகள் நடந்து வந்துள்ளன.

வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு வந்த நிலையில் சமூக ரீதியிலான மோதல், நெருக்கமான காவல் அதிகாரி ஒருவர் செய்த உள்குத்து ஆகியவற்றால் பல்வீர் சிங் மாட்டிக் கொள்ளும் சூழலை ஏற்படுத்தி விட்டது. கடந்த மார்ச் 26ஆம் தேதி அன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மார்ச் 29ஆம் தேதி அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் அமுதா ஐஏஎஸ் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் நெல்லையில் 4 நாட்கள் முகாமிட்டு விசாரணையை தொடங்கினார். பலரிடம் விசாரித்து சிசிடிவி கேமராக்கள் மூலம் உரிய ஆதாரங்களை சேகரித்து இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பித்தார்.

இதற்கிடையில் ஏப்ரல் 17ல் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. சமீபத்தில் நடந்த கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமுதா ஐஏஎஸ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.