காளி குறித்த சர்ச்சை டுவீட்டுக்கு மன்னிப்பு கோரியது உக்ரைன்!

காளி உருவத்தையொட்டிய படத்தை சித்தரித்ததற்காக உக்ரைன் வருத்தம் தெரிவிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதியான கிரிமியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு தாக்குதலுக்கு உள்ளானதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் புகைக்கு மேல் ஒரு பெண்ணின் படத்தை சித்தரித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு டுவீட் செய்திருந்தது. அந்த பெண்ணின் உருவம் காளி உருவத்தை ஒத்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தப்படம் இந்தியார்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்திருந்த இந்தியர்கள் உக்ரைன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்தியாவில் பரவலான மக்களால் வணங்கப்படும் காளி கடவுளை அவமதிக்கும் செயல் இது என கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உக்ரைன் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் தபரோவா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இந்து கடவுள் காளியை தவறான முறையில் சித்தரித்து டுவீட் வெளியிட்டிருக்கிறது. நாங்கள் வருந்துகிறோம். உக்ரைன் மற்றும் அதன் மக்கள் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை மதிக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த டுவீட் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டது. இருதரப்பு உறவு மற்றும் நட்புறவை மேலும் அதிகப்படுத்துவதற்கு உக்ரைன் தீர்மானித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வந்து சென்ற சில வாரங்களில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை இவ்வாறு ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.