அவதூறு வழக்கில் ராகுல் நேரில் ஆஜராவதில் விலக்கு தர ஜார்க்கண்ட் கோர்ட் மறுப்பு!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு தர முடியாது என ஜார்க்கண்ட் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது ராகுல் காந்திக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் மோடி பெயர் குறித்து விமர்சித்தார் என்பது அவதூறு வழக்கு. இந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது. இந்த 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் முதலில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

இதே புகாருடன் ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னாவிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் விலக்கு கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் எம்பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற்த்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்திருந்தார். ராகுல் காந்தி மனுவை ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றம் நேற்று விசாரித்தது. விசாரணையின் முடிவில், விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு தர முடியாது என திட்டவட்டமாக கூறியது ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றம். இது ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.