தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தனது முடிவை திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரத் பவாரின் முடிவை ஏற்க மறுத்து கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் பதவியில் இருந்து ராஜினமா செய்யக்கூடாது என அவர்கள் சரத் பவாரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சரத் பவாரின் விலகல் முடிவு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான சரத் பவார், தனது கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் கொண்ட கட்சியின் உயர்மட்டக்குழு நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா முடிவை ஏற்க முடியாது என்று கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரத் பவாரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கட்சியின் இந்தத் தீர்மானத்தை பிரபுல் படேல், பி.சி. சாக்கோ உள்ளிட்டோர் சரத் பவாரை நேரில் சந்தித்து அளித்து, அவரது முடிவைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றதாக அறிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், “என்சிபி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தேன். 63 ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்த நான், எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் விடுபட விரும்பினேன். ஆனால், எனது முடிவை மக்கள் விரும்பவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் எனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும், மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்னை கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மக்களின் உணர்வுகளை என்னால் மீற முடியாது. உங்கள் அன்பு என்னை உணர்ச்சிவசப்படுத்தியது. என்சிபி உயர்மட்டக் குழுவின் முடிவு எனக்கு தெரிவிக்கப்பட்டது, அதை நான் மதிக்கிறேன். எனவே, பதவியை ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெறுகிறேன். புதிய உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்ற உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.