திமுக அரசின் அடையாளமான திராவிட மாடலை காலாவதியான மாடல் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா திராவிட மாடலை கடுமையாக சாடியுள்ளார். தமிழர்களை குடிக்க வைத்து குடிகெடுத்த மாடல் என அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், திராவிட மாடலை காலாவதியான மாடல் என விமர்சித்திருந்தார். ஆளுநரின் இந்த விமர்சனமானது திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கொந்தளிக்க செய்தது. இந்த சூழலில், சென்னை சத்யம் திரையரங்கில் பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்துவிட்டு வெளியே வந்த எச். ராஜாவிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
திராவிட மாடலா.. தமிழர்களை குடிக்க வைத்து குடிகெடுத்த மாடல் திராவிட மாடல். திராவிட மாடல் என்று ஒன்று இருக்குமானால், அது 1971 ஆகஸ்ட் 31-ம் தேதிதான் (தமிழ்நாட்டில் மது விலக்கு ரத்து செய்யப்பட்ட தினம்) தொடங்கி இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
திராவிட மாடல் காலாவதியானது என்பது மட்டுமல்ல, கற்பனையானதும் கூட. திடீரென ஒருவரின் வாயில் இருந்து பொருத்தம் இல்லாமல் திராவிட மாடல் என வந்துவிட்டால், அதை அனைவரும் பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது அறிவுடைமையும் ஆகாது என்பது என்னுடைய கருத்து. இவ்வாறு எச். ராஜா பேசினார்.