ஓ.பன்னீர்செல்வம் – சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், “பூனைக்குட்டி வெளியே வந்தது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 49-வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி மும்பை அணியை சென்னையில் வென்றுள்ளது. இந்த போட்டியை காண தனுஷ், அனிருத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் மேட்ச் பார்க்க வந்திருந்தனர். புதிதாகத் திறப்பட்ட கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து ஓபிஎஸ் போட்டியை கண்டு களித்தார்.
இந்தப் போட்டிக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசினார். சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு, இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்ததோடு, அமர்ந்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. அதிமுகவுக்கு எதிராக திமுக உடன் கூட்டு சேர்ந்து ஓபிஎஸ் செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்தச் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “பூனைக்குட்டி வெளியே வந்தது” எனக் கூறி ஓபிஎஸ் – சபரீசன் சந்திப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்துப் பேசியதை அப்போது ஈபிஎஸ் தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி ஓபிஎஸ் சட்டசபையில் புகழ்ந்து பேசியதையும் எடப்பாடி தரப்பினர் விமர்சித்தனர். இந்நிலையில் சபரீசன் உடனான ஓபிஎஸ் சந்திப்பு எடப்பாடி தரப்பினரின் வாய்க்கு அவல் பொரியாக அமைந்துள்ளது.