அமெரிக்காவில் உள்ள பிரபல வணிக வளாத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் டல்லாசுக்கு வடக்கே டெக்சாஸ் ஆலன் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள பிரபல மாலுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். நேற்றும் மாலில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் திடீரென்று ஒருநபர் மாலில் உள்ளவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். உயிரை தற்காத்து கொள்ளும் நோக்கத்தில் அவர்கள் அங்குள்ள கடைகளில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் துப்பாக்கிச்சூடு மட்டும் நிற்கவே இல்லை. தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் மாலில் இருந்த 10க்கும் அதிகமானவர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார்கள். இதனால் அதிர்ந்தவர்கள் உடனடியாக ஆலன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்தனர்.
இதற்கிடைய மாலில் இருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்தில் 7 பேர் இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் 9 பேர் குண்டுகாயமடைந்து உயிருக்கு போராடியதும் தெரியவந்தது. இதையடுத்து காயமடைந்த 9 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. மற்ற 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரை நோக்கியும் துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் பாதுகாப்பு கருதி தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் மாலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரை கொன்ற நபர் குண்டு பாய்ந்து இறந்தார் என டெக்சாஸ் காவல் துறையின் தலைவர் பிரையன் ஹார்வி கூறினார்.
இதுபற்றி டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறுகையில், ‛‛ இது மிகவும் கொடூரம். வெளியில் சொல்ல முடியாத சோகம்” என வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர் யார்? அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.