திராவிட மாடல் ஆட்சியின் மூலம் அரசியல் எதிரிகளை வியர்க்க வைத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஒரு பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, இரண்டாண்டுகளுக்கு முன் 7.5.2021 இல் மக்கள் தீர்ப்பை ஏற்று, தி.மு.க.வின் ஒருமித்த கருத்தமைந்த தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று கடந்த இரண்டாண்டுகளாக ‘திராவிட மாடல்’ என்ற வரலாற்று முத்திரை பொறித்த ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என்று மற்ற மாநிலத்தவரும் ஏற்கும் வண்ணம் சாதனை சரித்திரம் படைத்து வருகிறார்! அவரது ஆட்சி ‘சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்லும் ஆட்சியாக – சிறப்பான ஆட்சி’ என்று பொது நிலையாளர்களால் பாராட்டப்படுகிறது. அரசு பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி என்பது போன்ற அருமையான பல ஆக்கப்பூர்வ கல்வி மறுமலர்ச்சி திட்டங்களையும் கூட கூடுதலாக நிறை வேற்றுகிறார்!
சமூகநீதி, பாலியல் நீதி போன்றவையே திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகள் – அவற்றைச் செயலாக்குவதில் மிகவும் சிறப்பாகப் பணியாற்றி கடந்த 2 ஆண்டு சாதனைகளில் எவரும் வியக்கத்தக்க வண்ணம், தனது கடும் உழைப்பு, நிதானமான போக்கு, ஆழமான சிந்தனையையொட்டிய செயல் திறன் மாண்பினைப் பெற்றுள்ள முதலமைச்சராக சரித்திரம் படைக்கிறார் நாளும்! ஆட்சித்திறன் – மக்களின் பேராதரவு என்ற மகத்தான பலத்தின்மூலம் ”அனைவருக்கும் அனைத்தும் – எல்லார்க்கும் எல்லாமும்” என்பதனால்தான் அவரது தலைமையிலான ஆட்சிமீது இன எதிரிகளும், அரசியல் விபீடணர்களும், பதவி இழந்த பம்மாத்துக்காரர்களும், எங்காவது துரும்பு கிடைக்காதா – அதை இரும்புபோல் பிடித்து உயரலாம் என்று கருதும் ‘கானல் நீர்’ வேட்டையாளர்களையும்கூட அவரது ஆட்சித்திறன் – மக்களின் பேராதரவு என்ற மகத்தான பலத்தின்மூலம் காணாமற்போகச் செய்துள்ளது!
2 ஆண்டுகளுக்கு முன் அவர் பதவியேற்றபோது எப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடும், மக்களும் இருந்தார்கள்? கொரோனா கொடுந்தொற்று, மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த கொடுமை ஒருபுறம். மறுபுறம் பதவியேற்றபோது கருவூலம் காலி – கடன் சுமையினால் வட்டி வறுத்தெடுத்த நிலை – என்றாலும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறோம் என்ற உறுதிப்பாடு – இவற்றைக் கொண்ட திடச்சித்தத்துடன் உழைப்பின் உருவமாக, உண்மையின் பிரதிநிதியாகவே ஆட்சியை நடத்தி வருகிறார்! 5 ஆண்டுகளில் நிறைவேற்றிடவேண்டிய வாக்குறுதிகளை அவர் எவ்வளவு விரைந்து செயல்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவில் – கடுமையான நிதிப் பற்றாக்குறை நெருக்கடியிலும் செயல்படுத்தி மற்ற மாநிலத்தவரை வியக்க வைக்கிறார்! அரசியல் எதிரிகளை வியர்க்க வைக்கிறார்! வெறும் ”வித்தை”கள்மூலம் அல்ல; வினைத்திறன் மூலமாக! ஆட்சிக் கிரீடத்தில் பதித்தவை முத்துக்களாய் ஜொலிக்கின்றன!
அவர் பதவியேற்றபோது மகளிர் நிலை, சமூகநீதிக்கான வாய்ப்புகள், தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் – இவற்றின் நிலையும் – இரண்டு சோதனையான காலகட்டத்தில் சாதுரியத்தோடு, சாமானிய மக்களுக்கானது தமது ஆட்சி என்ற நினைப்போடு எளியோரின் ஏற்றத்திற்கும், வறியோரின் வாழ்வுக்கும் அவர் வகுத்துச் செயல்படுத்தும் திட்டங்கள் கல்வித்துறை, தொழில்துறை, சமூகநலத் துறை போன்ற பல துறைகளில் ஆட்சிக் கிரீடத்தில் பதித்த முத்துக்களாய் ஜொலிக்கின்றன! பரம்பரை இன எதிரிகளும், தந்திர அரசியல் சூதாடிகளும் அவரது ஆட்சிமீது எந்த அஸ்திரத்தை எப்போது வீசலாம் என்று காத்திருக்கிறார்கள்! ஆர்.எஸ்.எஸ். அரசான ஒன்றிய அரசு ‘திராவிட மாடல்’ என்ற பெயரையே ஒவ்வாமையோடு பார்த்து, இவ்வாட்சிக்கு எப்படியெல்லாம் ஒத்துழைக்காமல், நிதியளிப்பதிலும் செயற்கை நெருக்கடியை உருவாக்கி வருகிறது. ஒரு பச்சை ஆர்.எஸ்.எஸ். கொள்கையாளரை ஆளுநராக்கி, அவர் நாளும் ஆட்சிக்கு எதிராக எல்லை தாண்டி அவதூறுகளை அள்ளிவீசியும், ”எதிர்நீச்சலில் எங்களது இளமைக்காலப் பயிற்சியும், எதையும் தாங்கும் இதயமும், எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் எங்களுக்குப் பாலபாடம்” என்று நம் முதலமைச்சர் நிதானம் குன்றா நிறைகுடமாய் அகிலத்திற்குப் புரிய வைக்கிறார்! ஆச்சரியப்பட வைக்கிறார்!!
ஜாதி ஒழிப்புத் தொடங்கி சமத்துவ, சம வாய்ப்பு, சம உரிமை தத்துவங்களைச் செயலாக்கிக் காட்டும் ஆட்சியாகவே இவ்வாட்சி நடைபெறுகிறது! ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்’ என்ற ஜாதி ஒழிப்புப் புரட்சியை அவர் லாவகமாகச் செய்வதை, சனாதனம் இன்னமும் தனது சூழ்ச்சிவலை மூலம் தடுக்க முயலுவதை அவர் அறியாதவரல்ல! ஆட்சி சிம்மாசனம் எங்களுக்கு முக்கியமல்ல; மக்களின் இதயச் சிம்மாசனமே முக்கியம்! அந்தச் சூழ்ச்சி வலையை அறுத்தெறிந்து சாதிக்கும் வல்லமையை அவர் திராவிடர் இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், அவர் வழிவந்த அறிஞர் அண்ணா, நூற்றாண்டு நாயகர் கலைஞர் ஆகியோரிடம் கற்றுத் துறைபோகியவராகவே காட்சியளிப்பதால், மக்களை நோக்கி 1222 பொதுக்கூட்டங்கள்மூலம் ”ஆட்சி சிம்மாசனம் எங்களுக்கு முக்கியமல்ல; மக்களின் இதயச் சிம்மாசனமே எமது முக்கிய இடம்” என்பதை விளக்கி, மக்களிடம் பிரச்சார சூறாவளி மூலம் சென்றடையச் செய்துள்ளார்! இந்த அடிக்கட்டுமான பலம் இந்தியாவில் – இன்றைய நிலையில் வேறு எந்த ஓர் அரசியல் கட்சிக்காவது – ஆட்சிக்காவது உண்டா? கிடையாது! ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்! அவை ”தேர்தல் நேர பூம்பூம்பாக்கள்” அல்ல திராவிடம் – மாலை நேரக் கல்லூரிபோல, மக்களை ஆற்றுப்படுத்தும் இயக்கம்; எனவேதான், – 1222 பிரச்சார (‘திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்’) பொதுக்கூட் டங்கள் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள், பாராட்டுகள்! மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சருக்கும், ஆட்சிக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கின்றோம்! ”திராவிடம் வெல்லும் – வரலாறு என்றும் சொல்லும்!”. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.