ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு சூழல் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பட்டா துரியான் பகுதியில் ஏப்.20ம் தேதி ராணுவ வாகனத்தில் தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போது தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் ராணுவ மேஜர் உட்பட 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி பொறுப்பேற்று உள்ளது. இதை அடுத்து ரஜோரி மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு ஆபரேஷன் திரிநேத்ரா என்ற பெயரில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் குறித்து நேரில் ஆய்வு செய்தார். நேற்று ஜம்மு சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் ஆளுநர் மனோஜ் சின்கா உள்ளிட்டோர் உடன் சென்றனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் அங்கு நடந்தது. இதை தொடர்ந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் அருகில் உள்ள மற்ற பகுதிகளிலும் தீவிரவாத தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டது.