தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி முற்றிலுமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக திட்டமிடாத காரணத்தினாலும் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும், ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் இறந்ததாகவும், மற்றொரு இளைஞர் கோவில் மண்டப வாசலின் அருகே கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவங்கள் நடந்ததை அறிந்து மிகுந்த வருத்த மடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சமாக, மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் நடனமாடிய காட்சிகள் இன்றுகூட ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. பட்டாக்கத்தியுடன் இருந்த இளைஞர்கள் சுதந்திரமாக உலா வந்ததைக் கண்டு பக்தர்கள் மிகவும் அச்சமடைந்தனர். இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததா என்றும் தெரியவில்லை. இந்நிகழ்வுகளை பார்க்கும்போது, தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, பொதுமக்கள் கூடும் திருவிழா சமயங்களில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, 2 ஆண்டுகளாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்வில் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள், தஞ்சை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட துயரச் சம்பவங்கள், நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் துயரச் சம்பவங்கள் என்று தொடர்ச்சியாக நடந்த துயரச் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.
தி.மு.க. அரசு இனியாவது விழித்துகொண்டு லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோவில் திருவிழாக்களின்போது தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.