பெண்கள் என்றால் கண்டிப்பாக இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதை மாற்ற வேண்டும்: கனிமொழி

பெண்கள் என்றால் கண்டிப்பாக இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதை மாற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார்.

திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று 100ஆவது கல்லூரி நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:-

உலகத்தின் பல்வேறு நாடுகளில் பெண்கள் தங்கள் வாக்குரிமையை பெறுவதற்காக துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு ஏன் கொலை கூட செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் பெண்கள் எளிமையாக தங்களது வாக்குரிமையை பெற்றார்கள். தமிழகத்தில்தான் நீதி கட்சியின் ஆட்சியில் திராவிட இயக்க வரலாற்றை தாங்கிக் கொண்டிருக்கிறது. நீதி கட்சியில்தான் 1921 ஆம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டு போடும் உரிமை வழங்கப்பட்டது. எத்தனையோ போராட்டங்களை தாண்டிதான் இங்க இருக்கும் பெண்களுக்கு படிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பெண்களுக்கு கல்வி எல்லாம் அவசியமே இல்லை என்கிற காலகட்டம் இருந்தது. அப்போது தந்தை பெரியார் போன்றவர்களும் கிறிஸ்துவ அமைப்பினரும் பெண்களுக்கும் கல்வி அவசியம் என குரல் கொடுத்ததால்தான் இன்று இத்தனை பெண்கள் பட்டம் பெற்றுள்ளனர். பள்ளியில் நன்றாக படித்த பெண்கள் திடீரென அடுத்த நிலைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் இன்று சில மாணவிகளை எதிர்கால திட்டம் கேட்ட போது உயர் கல்வி குறித்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக வேண்டும் என சொல்லும் போது கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெண்கள் தங்கள் கனவு, லட்சியத்தை அடைய வேண்டும். கனவை எளிதாக விட்டுக் கொடுத்துவிட்டு அதை தியாகம் என பெண்கள் கருதுகிறார்கள். உங்கள் கனவை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டும். பெண்கள் என்றால் கண்டிப்பாக இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதை மாற்ற வேண்டும். அவர்களுக்கு என ஏன் டிரஸ்கோடு இருக்க வேண்டும் என எனக்கு தெரியவில்லை. மாறாக ஆண்களை சரியாக வளர்க்க வேண்டும். ஒரு பெண் என்ன உடையை உடுத்திக் கொண்டாலும் ஆண்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.