யூடியூபர் மணீஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

மணிஷ்காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனக்கு எதிரான 19 வழக்குகளையும் பீகாருக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பா.ஜனதாவினர் பிரச்சினை கிளப்பினர். தமிழகத்திலும் சர்ச்சை எழுந்தது. இந்த பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் மணீஷ் காஷ்யப். பீகாரை சேர்ந்த இவர் 4 ஆண்டுகளாக யூடியூப் சேனலில் அரசுகளுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது. பணம் சம்பாதிக்க தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ காட்சிகளை தயாரித்துள்ளார். மணீஷின் சேனலில் 30 போலி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மணீஷ் காஷ்யப் உள்ளிட்ட 11 பேர் மீது மார்ச் 7-ந் தேதி பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 6 பேர் கைதான நிலையில் மணீஷ் காஷ்யப் மேற்கு சாம்பரன் கோர்ட்டில் சரண் அடைந்தார். இவர் மீது மதுரையிலும் வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து பீகார் போலீசார் அவரை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். மணிஷ்காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூடியூபர் மணீஷ் காஷ்யப் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதோடு தனக்கு எதிரான வழக்குகளை இணைத்து ஒரே வழக்காக பீகாரில் விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து மணீஷ் காஷ்யப் தொடர்ந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. தனக்கு எதிரான 19 வழக்குகளையும் பீகாருக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. அமைதியான தமிழகத்தில் பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டை நாடவும் மணீஷ் காஷ்யப்பை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.