உலக நாடுகள் ஒப்பந்தங்களை மீறும்போது அவநம்பிக்கை அதிகரிப்பு: ஜெய்சங்கா்!

உலக நாடுகள் ஒப்பந்தங்களை மீறும்போது பரஸ்பர நம்பிக்கைக்கு ஏற்படும் சேதம் மிகப் பெரிதாகிறது, அவநம்பிக்கை அதிகரிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்ற 6-ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்டு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:-

சட்டத்தை கடைப்பிடிப்பது, வழக்கங்களைப் பின்பற்றுவது, விதிமுறைகளை மதிப்பது ஆகியவை இயற்கையான இணைப்பு புள்ளியாகும். மிகப் பெரிய அளவில் வளா்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ள இந்திய துணைக்கண்டத்துக்கு அவை முக்கியம். அவை இல்லாமல் நிலையான சா்வதேச ஒழுங்குமுறையை கட்டமைப்பது சாத்தியமில்லை.

உலக நாடுகள் சட்டரீதியான கடமைகளைப் புறக்கணிக்கும்போது அல்லது நீண்ட கால ஒப்பந்தங்களை மீறும்போது, பரஸ்பர நம்பிக்கைக்கு ஏற்படும் சேதம் மிகப்பெரிதாகிறது; அவநம்பிக்கை அதிகரிக்கிறது. எனவே அவரவா் நலன் சாா்ந்த உத்திகளை விடுத்து ஒத்துழைப்பை நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போது ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள், அவற்றின் கடந்த கால விருப்பத் தோ்வுகளால் ஏற்பட்ட விளைவுகளை சந்தித்து வருகின்றன. எனவே இது சீா்திருத்திக் கொள்வதற்கான நேரமே தவிர, எதையும் திரும்பச் செய்வதற்கான நேரம் அல்ல. உலக நாடுகள் பரஸ்பரம் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளின் நல்வாழ்விலும் முன்னேற்றத்திலும் இந்தியா ஈடுபாடு கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.