ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி

ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது. அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாறி உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை கவர்னர் மாளிகையில் அன்னையர் தின நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் தாயாரை அழைத்து வரச்செய்து கவர்னர் ஆர்.என்.ரவி பெருமைப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

குழந்தைகள், குடும்பம் வளர்ச்சிக்காக உழைப்பதை அன்னையர் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர். மனிதனிடம் உள்ள அன்பு குணம் தாய் மூலம் மட்டுமே வருகிறது. நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக்கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிக்கு செல்கின்றனர். எங்கிருந்தாலும் தாயை கைவிடக்கூடாது. நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். தாயை ஒதுக்கி விடாதீர்கள். அவர்களுடன் சகஜமாக பேசுங்கள். அதுவே தாய்க்கு சந்தோசத்தை தரும். தாய் இல்லாமல் நாம் யாரும் இல்லை.

மொழி, கலாச்சாரம், கடந்து உலகம் முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே. மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கிறது. அந்த தாய் படித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதனி டம் உள்ள அன்பு குணங்கள் தாய் மூலம் மட்டுமே வருகிறது. ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது. அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாறி உள்ளது. கவர்னர் மாளிகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தாலும் அன்னையர் தினத்தில் இங்கு வந்திருந்து பெருமைப்படுத்திய அன்னையர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.