கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, இந்த சம்பவத்தை அடுத்து எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக 2 காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்த 6 பேர் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. காவல்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர் கண்காணிப்பில் சேர்க்கப்பட்டனர். இதில் உயர் சிகிச்சையில் இருந்த சங்கர் (வயது 52), தரணிவேல் (50), சுரேஷ் (46), ராஜமூர்த்தி (60), மலர்விழி (60) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும் ஒருவர் உயர் சிகிச்சையில் இருந்து வருகிறார். மீதமுள்ளவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்பில் நலமாக இருக்கிறார்கள். புதுச்சேரியில் சாராயம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டு வந்து விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஷ சாராயத்தால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன் (27) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த சாராய பாக்கெட்டுகளை ஆய்விற்கு அனுப்பி சோதனை செய்ததில், அதில் மெத்தனால் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது, மேலும் வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (34), அவரது மனைவி அஞ்சலை (22), அஞ்சலையின் தாய் வசந்தா (40), பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணியப்பன் (65), அவரது மனைவி சந்திரா (55) ஆகியோர் விஷ சாராயத்தை குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் சின்னத்தம்பி, வசந்தா, வெண்ணியப்பன், சந்திரா ஆகியோர் தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளனர். அஞ்சலை செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் விஷ சாராயம் அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷ சாராயத்தை விற்ற கரியன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அம்மாவாசை (40) என்பவரும் அதே மதுபானத்தை அருந்தி உடல்நலம் சீராக காணப்பட்டபோதிலும் மருத்துவ சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி இருக்கலாம். விஷ சாராயம் என்பது எத்தனால் மற்றும் மெத்தனால் கலக்கப்பட்டது. இதை குடித்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். சில சமயங்களில் இறப்புகூட ஏற்படும். இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மரக்காணம் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேர் மற்றும் சித்தாமூர் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுவை உட்கொண்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற வதந்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது விஷ சாராயத்தால் ஏற்பட்ட இறப்பு. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நடவடிக்கை எடுக்காத மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு தொடர்பாக போலீசார் முடுக்கிவிடப்பட்டு சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மண்டலத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு போலீசாருடன், மதுவிலக்கு போலீசாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.