திருமாவளவன் பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும்: வானதி சீனிவாசன்

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி சமூக நீதியை உண்மையாகவே கொண்டாடுகிற பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

கர்நாடக தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறும்போது, இந்தியா முழுவதும் பா.ஜனதா முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் தமிழகத்தில் பா.ஜனதாவை தூக்கி சுமக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கு முன்பு தான் சார்ந்து இருக்கும் கூட்டணியில் தனது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேறி இருக்கிறதா என்பதை திருமாவளவன் எண்ணிப்பார்க்க வேண்டும். சமூக நீதிக்காக குரல் கொடுத்து வருகிறார் திருமாவளவன். 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சமூகநீதி பாதுகாக்கப்பட்டுள்ளதா? வேங்கைவயல் சம்பவமும், தொடரும் ஆவணகொலைகளும், தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகளும் சமூக நீதியின் அடையாளங்களா? ஆதிதிராவிடர்கள், பட்டியலினத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கோடிகணக்கான நிதியை கூட தி.மு.க. அரசு செலவளிக்க வில்லையே. பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். அதை கேட்க கூட தெம்பில்லையே.

ஆனால் பா.ஜனதாவை பாருங்கள் பட்டியலினத்தையும், பழங்குடியினத்தையும் சேர்ந்த பலர் எம்.பி.க்களாக இருக்கிறார்கள். முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் பதவியும் வழங்கினோம். இது இப்போது மட்டுமல்ல எப்போதும் பா.ஜனதாவில் கடைப்பிடிக்கப்படும் சமூக நீதி. சமூகநீதி காக்கப்பட வேண்டும், நிலை நாட்டப்பட வேண்டும் என்ற அக்கறை இருந்தால் திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி சமூக நீதியை உண்மையாகவே கொண்டாடுகிற பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.