விழுப்புரத்தில் கள்ளசாராயத்தால் பலி: முதல்வர் நேரில் ஆறுதல்!

மரக்காணம் பகுதி அருகே விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் வாம்பாமேடு எனும் இடத்தில் சிலர் காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த இடத்திற்கு சாராயம் குடிக்க வந்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ் மற்றும் ராஜமூர்த்தி ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் இதில் சம்பவ இடத்திலேயே தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழ, சங்கர் (50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (65), சுரேஷ் (65). மற்றொரு மண்ணாங்கட்டி (55) ஆகியோர் தங்கள் வீட்டில் மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவர்களை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 3 பேர் இறந்துவிட, கள்ளச்சாராயம் காய்ச்சிய இடத்தில் மயங்கி விழுந்தவர்களில் 3 பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் நேற்று வரை 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதேபோல விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். விற்பனை செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.