உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து, பிரான்ஸ் உறுதி!

ஜெலெனஸ்கி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பின் போது உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க உறுதியளிக்கப்பட்டது.

உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக மேற்கத்திய தலைவர்களை சமீப நாட்களாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்து வருகிறார். தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பதற்காக, ஜெலென்ஸ்கி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது டுவிட்டரில், எனது நண்பர் திரு ரிஷி சுனக்கைச் சந்தித்து, கணிசமான பேச்சுவார்த்தைகளை நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து அறிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பிற்கு உதவும் வகையிலும், போரின் போக்கை மாற்றும் முயற்சியாகவும், மேலும் நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இங்கிலாந்து வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளது.

இதேபோல் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்கான பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு நேற்று மாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை எலிசீ அரண்மனையில் சந்தித்து பேசினார். இதன்பின்னர், இரவு விருந்திலும் கலந்து கொண்டார். இந்த நிலையில், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார். உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்காக, கூடுதலாக இலகுரக பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது. இவற்றில், ஏ.எம்.எக்ஸ்.-10ஆர்.சி. ரக பீரங்கிகளும் அடங்கும். அவை போர்களத்தில் விரைவாக இயங்க கூடியவை. ஓரிடத்தில் இருந்து தனது நிலையை எளிதில் மாற்றும் திறன் பெற்றவை. உக்ரைனிய படைகளுக்கு அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் பிரான்ஸ் வழங்க இருக்கிறது. இரு நாட்டு தலைவர்களும் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் இன்று அளித்த கூட்டறிக்கையில் மேற்கூறிய தகவலை வெளியிட்டனர். உக்ரைனுக்கு அரசியல், நிதி, மனிதநேய மற்றும் ராணுவ உதவிகளை எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுமோ அதுவரையில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து வழங்கி ஆதரவளிக்கும் என பாரீஸ் நகரில் வைத்து மேக்ரான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.