ரெயில்வே பணி நியமனத்தில் நிலம் பெற்ற ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று ஆஜரானார்.
ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்.ஜே.டி.) கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கு பிரதிபலனாக லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.1 கோடி பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இருந்தது.
பீகார் துணை முதல்- மந்திரி தேஜஸ்வி யாதவ், மிசா பாரதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை எம்.பி. பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது. இந்நிலையில் ரெயில்வே பணி நியமனத்தில் நிலம் பெற்ற ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று ஆஜரானார். சட்ட விரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டு தொடர்பாக அவர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவர்களால் 11.30 மணியளவில் ஆஜரானார். ராப்ரி தேவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.