தேசிய தலைநகர் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கே முழு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், இது குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதிலும் தொடர்ந்தது. டெல்லி அரசு அதிகாரிகளை நியமிப்பதில் அதிகாரம் அற்றதாக இருந்ததால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர்தான் அதிகாரிகள் நியமனத்தில் முக்கிய பங்காற்றி வந்தார். இதனால் டெல்லி அரசுடன் கருத்து வேறுபாடு கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். எனவே இந்த அதிகாரிகளுக்கும் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றவர்களுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்த டெல்லி அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விசாரணையின் முடிவில் அதாவது கடந்த 11ம் தேதி நீதிபதிகள் ஒருமனதாக இந்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இந்த உத்தரவின்படி, “மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தனர். மேலும், “ஜனநாயக ஆட்சியில் நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ஒன்றே ஒன்றுதான். அதாவது, ஆட்சி நடப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதான் மத்திய அரசின் வரம்பு. மற்றபடி ஆட்சியையோ, நிர்வாகத்தையோ கைப்பற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. டெல்லியை பொறுத்த அளவில் நிலம், பொது ஒழுங்கு, காவல்துறை ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதிகாரிகளை நிர்ணயிப்பது, நிர்வாகம் செய்வது, அதிகாரிகளை மாற்றம் செய்வது போன்றவற்றில் மாநில அரசுக்குதான் முழு அதிகாரம் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், மக்கள் பிரிதிநிதிகள் கொடுக்கும் வழிக்காட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்றவில்லையெனில் அந்த இடத்தில் கூட்டு பொறுப்பின் கொள்கை பாதிக்கப்படும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 2019ம் ஆண்டு நீதிபதி அசோக் பூஷன் வழங்கிய தீர்ப்பில் இந்த அரசியல் சாசன அமர்வு உடன்படவில்லை. மக்கள் விருப்பத்தை பிரிதிநிதித்துவப்படுத்தி அதனை சட்டமாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படடுள்ளது. அரசாங்கத்தின் முடிவுகளுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள், அமைச்சர்கள் குழுவின் முடிவுகளுக்கும் ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. காரணம் தமிழ்நாடு, கேரளா தொடங்கி மேற்குவங்கம் வரை எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள்-ஆளும் கட்சியின் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. எனவே இந்த உத்தரவு அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்றும் பேசப்பட்டது. இப்படியான சூழலில் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.