செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

அரவக்குறிச்சி தொகுதி விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து, சுயேட்சை வேட்பாளர் ஏ.பி.கீதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து முடித்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மனு நீண்ட மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் பட்டியலிடப்பட்டதால் செந்தில் பாலாஜி மனு காலாவதியாகி விட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து ஏ.பி.கீதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு காலாவதி ஆகிவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால் உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரவக்குறிச்சி தேர்தல் வழக்கு தொடர்பாக காலாவதியான எனது மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து அதனை முடித்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துக் கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘‘செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. மேலும் அவருக்கு எதிரான தேர்தல் வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.