நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட்: தமிழிசை சவுந்தராஜன்!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட் என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்பட்ட பிறகு மத்திய அரசு புதிய ரூ.2 ஆயிரம் தாள்களை அறிமுகப்படுத்தியது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் சமீப காலமாக மக்கள் மத்தியில் குறைந்துள்ள நிலையில், ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும் என்றும் ரிசர் வங்கி அறிவித்து இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், புதுவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இது குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

பொதுத்தேர்வுகளில் தோல்வி பெற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள கூடாது. தேர்வு வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்.. வாழ்க்கை இன்னும் நிறைய உள்ளது. தேர்வு எழுதாத பல பேர் வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள். எனவே மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டும். தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும். தன்னம்பிக்கைக்கு மாரல் வகுப்புகள் நடத்த வேண்டும். தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்யப்படும்.

புதுவையில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி காத்துக் கொண்டு இருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லியின் நிலை வேறு, புதுவையின் நிலை வேறு. மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவது நாராயணசாமிக்கு கவலையாக இருகிகிறது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், “இந்த தடை குறித்து எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட்.. நோட்டும் ஒயிட்.. 2 ஆயிரம் நோட்டு தடை பற்றி விவரங்களை அறிந்து பதிலளிக்கிறேன்” என்றார்.