திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளிக்க, அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று(மே 22) சென்னையில் சின்னமலை பகுதியில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது. பேரணி முடிவில் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இம்மாதம், 18ம் தேதி சென்னையில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று(மே 22) கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று, மனு அளிக்க முடிவானது. அதன்படி, கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் இன்று சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் இருந்து அடையாறு, சர்தார் படேல் சாலை, கிண்டி வழியாக ஊர்வலமாக கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அப்போது கவர்னரை சந்தித்து, அ.தி.மு.க.,வின் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மனு அளித்தனர். இந்த பேரணியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். சென்னை சின்னமலை பகுதியில் இருந்து கவர்னர் மாளிகை வரை அதிமுகவினர் சாலையின் நடுவே குவிந்து, கோஷங்கள் எழுப்பினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கவர்னருடனான சந்திப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் தமிழகத்தில் அன்றாடம் நடக்கின்ற நிகழ்வுகள், மக்களின் அவதிகளை கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அந்த மனுவில் திமுக அரசு செய்த ஊழல்கள், மணல் கொள்ளையால் வி.ஏ.ஓ கொலை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் கள்ளச்சாராய விவகாரம் குறித்தும் முறையிட்டுள்ளோம். கள்ளச்சாராய சாவுகள் நடந்தும் இந்த அரசு விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால், நேற்று (மே 21) போலி மதுபானம் குடித்து தஞ்சாவூரில் 2 உயிர்களை இழந்திருக்க மாட்டோம். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்புகள் தொடர்கின்றன. கள்ளச்சாராயமும், போலி மதுபானமும் அரசுக்கு தெரிந்தே விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.