பிரதமர் மோடியை காலை தொட்டு வணங்கிய பப்புவா நியூ கினியா பிரதமர்!

இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி பப்புவா நியூ சென்ற நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச டாப் பொருளாதாரங்களைக் கொண்ட ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றிருந்தார். ஜி7 உச்சி மாநாட்டில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து உலக நாட்டுத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நேரடியாக பப்புவா நியூ கினியா சென்றுள்ளார். இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 3ஆவது உச்சி மாநாடு நடக்கும் நிலையில், அதில் பங்கேற்கப் பிரதமர் சென்றுள்ளார்.

பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பசிபிக் தீவுகள் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை ஏர்போர்ட் சென்று வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், பிரதமரைக் கண்ட உடன் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார். பொதுவாகச் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் பப்புவா நியூ கினியா சார்பில் வரவேற்பு அளிக்கப்படாது. ஆனால், பிரதமர் மோடிக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேல் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “பப்புவா நியூ கினியாவை அடைந்தேன். விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றதற்காகப் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பேவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும் ஒரு சிறப்பு வரவேற்பாக இது இருக்கிறது. இந்த மகத்தான தேசத்துடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தக் காத்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார். முதலில் பிரதமர் மோடியைக் கட்டித்தழுவி வரவேற்ற ஜேம்ஸ் மராப் அதன் பிறகு மோடியின் காலில் விழுந்து வணங்கினார். அதன் பிறகு அந்நாட்டின் முக்கிய தலைவர்களை நோக்கிச் சென்றனர். பிரதமர் மோடிக்கு அங்கே 19 துப்பாக்கிகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவும் பப்புவா நியூ கினியாவும் வலுவான உறவுகளைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறது. 2021இல் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த போது, இந்தியாவிலிருந்து கொரோனா வேக்சின்கள் பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்பப்பட்டது. இது அந்த நேரத்தில் இந்த குட்டி தீவு நாட்டிற்கு மிகப் பெரியளவில் உதவியது. இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டை நரேந்திர மோடி மற்றும் ஜேம்ஸ் மாரப் இன்று திங்கள்கிழமை நடத்தவுள்ளனர். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும், இந்த பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி பப்புவா நியூ கினியா கவர்னர் ஜெனரல் பாப் தாடேவை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.