பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்திருப்பதால் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங்-க்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யுமாறு நான்கு மாதங்களுக்கு முன் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் குழு அமைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதியளித்தார். அதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து அமைக்கப்பட்ட குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தமையிலான குழு அறிக்கை அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறி மல்யுத்த வீராங்கனைகள் 45 நாட்களுக்கு மேலாக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் தலையிட்டதை அடுத்து பிரிஜ் பூஷன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதனிடையே தான் எந்த குற்றமும் செய்யவில்லை என மறுத்துள்ள பிரிஜ் பூஷண் சிங் இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு இருப்பதாக சாடினார். ஆனால், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்ததால் அவருக்கு சிக்கல் அதிகரித்தது. இந்நிலையில், தம் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறும் வீராங்கனைகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்பு கொள்வார்களா என பிரிஜ் பூஷன் சிங் சவால் விடுத்தார். அப்போது தம் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என தெரியவரும் என அவர் கூறினார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் மட்டும் இல்லை அவர் மீது புகார் அளித்திருக்கும் அத்தனை பெண்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறோம் என சவாலை ஏற்றனர். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர்கள் அதனை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த நாட்டின் மகள்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்துள்ளார் என்பதை நாட்டு மக்கள் பார்க்கட்டும் என்று வீராங்கனைகள் அறிவித்து இருப்பதால் பிரிஜ் பூஷன் சிங் சிக்கல் அதிகரித்துள்ளது.