தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். மேலும், சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன். சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் உள்ளது. சிங்கப்பூர் வாழ் தமிழர்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிங்கப்பூர்- தமிழ்நாடு இடையேயான தொடர்பு ஆயிரம் ஆண்டுக்கும் மேலானது. தமிழால் இணைந்துள்ள நம்மை சாதி மதத்தால் பிரிக்க முடியாது. தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.