ஜோ பைடனை கொல்ல முயற்சி: இந்திய வம்சாவளி இளைஞர் கைது!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த சாய் வர்ஷித் கண்டுலா(19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவில் இப்போது ஜோ பைடன் அதிபராக உள்ளார். அடுத்தாண்டு அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிலும் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதற்கிடையே திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் அமெரிக்க அதிபர் இருக்கும் வெள்ளை மாளிகை அருகே உள்ள லாஃபாயெட் பூங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள தடுப்புகளை லாரி ஒன்று திடீரென வந்து மோதியது. தாறுமாறாக வந்து மோதிய இந்த டிரக்கை பார்த்து அங்கிருந்த மக்கள் அக்கம்பக்கத்தில் தெறித்து ஓடினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெள்ளை மாளிகை குறிப்பிட்ட அளவு தொலைவில் இருந்தாலும் கூட பாதுகாப்பு காரணங்களால் அந்த முழு பகுதியும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் தாறுமாறாக வந்த லாரியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது டிரக்கின் உள்ளே வெறும் 19 வயதே ஆன இளைஞர் இருந்ததைப் பார்த்து போலீசார், அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸிலிருந்து டல்லஸ் நகருக்கு கந்துலா விமானம் மூலம் வந்துள்ளார். இதையடுத்து அங்கே டிரக் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வாடகை டிரக்கை தான் அவர், வெள்ளை மாளிகையின் வடக்கே இருந்த தடுப்புகளைத் தாண்டி நடைபாதையில் வேண்டுமென்றே மோதியுள்ளார். முதலில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்து என்றே போலீசார் இதை நினைத்துள்ளனர். இருப்பினும், டிரக்கை எடுத்த கந்துலா ரிவர்ஸில் வந்து மீண்டும் தடுப்பு மீது மோதியுள்ளார். அதன் பின்னரே உஷாரான போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது ஆறு மாதங்களாக இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு வந்ததாகவும், விரிவான திட்டத்தைத் தனது “பச்சை புத்தகத்தில்” வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து, அதிகாரத்தைக் கைப்பற்றி, தேசத்தின் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொள்வதே திட்டம் என்றும் கந்துலா தெரிவித்துள்ளார். அதிகாரத்தை எப்படிக் கைப்பற்றுவார் என்று விசாரணை அதிகாரிகள் கேட்டபோது, ​​”நான் அதிகாரத்தைக் கைப்பற்ற அதிபரைக் கொல்ல வேண்டும் என்றால் அதையும் செய்வேன்.. அதைத் தடுக்க யார் வந்தாலும் அவர்களையும் விட மாட்டேன்” என்று கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

மேலும், அவர் ஹிட்லரின் நாஜி கொடியையும் தனது பேக்கிற்குள் வைத்து எடுத்து வந்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் கேட்ட போது, நாஜிகளுக்கு ஒரு சிறந்த வரலாறு உள்ளதாகக் கூறி அதிர்ச்சி தந்துள்ளார். இதையடுத்து போலீசார் அடுத்தகட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர்.