தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: அன்பில் மகேஷ்!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் ஜூன் 1ஆம் தேதியும், தொடக்கப் பள்ளிகளான ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதியும் திட்டமிட்டபடி திறக்கப்படும். கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கின்றனர். பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வர் அதனை அறிவிப்பார்.

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கட்டண விகிதங்கள் நிர்ணயிப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே, தனியார் பள்ளிகளுக்கு அரசின் வழிகாட்டுதல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகள் திறப்புக்கு முன்பாக முறையான சோதனைகளுக்குப் பிறகே பள்ளிப் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறந்து வைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்துள்ளது. அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மணி மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறப்பு அன்றே புத்தகங்கள் வழங்கப்படும். போதுமான புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன. இலவச மிதி வண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மடிக்கணினி வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த பள்ளி கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி, 185 ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நபார்டு வங்கி உதவி தேவைப்படுகிறது. நபார்டு வங்கி என்பது அனைத்து அமைச்சர்களின் துறைகளுக்கும் நிதி உதவி வழங்குகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித் துறைக்கும் தேவையான நிதி உதவி பெற்று கட்டடங்கள் கட்டித் தரப்படும். ஒரு மாத காலத்துக்குள் பழுதானவை புதுப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.