சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ், லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு திருநங்கைகளை அழைத்துச் சென்று இலவசமாக காண வைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு ஏராளமான முறை நடந்துள்ளது. சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை காண தமிழ்நாடே ஆர்வமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இந்த தொடருடன் ஓய்வு பெறப்போகிறார் என்று மக்கள் நினைப்பதால், அவருடைய ஆட்டத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பலரும் வருகிறார்கள். சென்னை மக்களால் தோனி சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்படுவது ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுகிறது. பலரும் எம்எஸ் தோனி அணியும் 7ம் நம்பர் டீசர்ட் தான் போட்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர் மீது நம்பிக்கை பாசம் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
மக்களின் ஆர்வம் காரணமாக சென்னையில் ஐபிஎல் போட்டியில் டிக்கெட் எடுப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. குறைந்த விலை டிக்கெட்டுகளை பெரும்பாலான மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து பெற்று சென்று பார்த்து ரசித்தார்கள். அதேநேரம் ஐபிஎல் தொடரின் குவாலிபையர் போட்டிகளுக்கு டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவித்தது சென்னை அணி. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டிக்கு ஆன்லைனில் தான் டிக்கெட் கிடைத்தது. அந்த போட்டிகைளை பலரும் பார்த்து ரசித்தார்கள்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஆசைப்படும் தனது தொகுதி ஏழை மக்களுக்கு இலவசமாக டிக்கெட் கொடுத்து அழைத்து சென்று வருகிறார். அந்த வகையில் நேற்று புதன்கிழமை நடந்த மும்பை இந்தியன்ஸ், லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு திருநங்கைகளை அழைத்துச் சென்று இலவசமாக காண வைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட 25 திருநங்கையர்- திருநம்பியர்களை சேப்பாக்கம் ஸ்டேடியமில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியை இன்று(நேற்று) காணச் செய்தோம். உற்சாகத்துடன் ஐபிஎல் போட்டியை கண்டு மகிழ்ந்த திருநங்கையர் – திருநம்பியர்களுக்கு அவர்களின் சகோதரனாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.