செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? என்றும், குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ஒரு சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் செய்யவில்லை என்றால் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் திமுகவினர் தடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினால் வருமான வரித்துறையினர் தான் பணம் தர வேண்டியிருக்கும். குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? சோதனை செய்ய விடாமல் தடுக்கப்படும் போது தவறு இருப்பது போல வெளியில் தெரிகிறது.
வருமான வரி சோதனை கண் துடைப்பு நடவடிக்கை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இது போன்ற நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் போது தற்போது பாஜக அனைவரையும் மிரட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க அனைவரையும் மிரட்ட வேண்டியதுதான். எவ்வளவு ஆவணங்கள் எடுக்கப்பட்டது.. எவ்வளவு சொத்து மதிப்பு உள்ள ஆவணங்கள் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடுவது இல்லை. அங்கே ஒரு பேரம் நடக்கிறது. அமலாக்கத்துறைக்கு மட்டும் தான் இவர்கள் பயப்படுகிறார்கள். விஜய் வீட்டில் 2 நாள் சோதனை நடத்தி விட்டு எல்லா கணக்கையும் சரியாக வைத்து இருக்கிறார் என்று சொன்னார்கள். இவ்வாறு அவர் கூறினார்.