மல்லிகார்ஜுன கார்கே, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கமிஷனரிடம் புகார்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எதிராக வேண்டுமென்றே கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் என்பவர் இது தொடர்பாக டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், “நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே, அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவரின் சாதியை வேண்டுமென்றே குறிப்பிட்டு, அதன் காரணமாகவே அவர் அழைக்கப்படவில்லை என்பது போல் தெரிவித்துள்ளனர். இது குடியரசுத் தலைவர் சார்ந்த ஆதிவாசி மற்றும் எஸ்டி சமூகத்தினரை, பிற சமூகத்தவர்களுக்கு எதிராக தூண்டிவிடும் செயல். அதோடு, அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி. அரசியல் ரீதியில் ஆதாயம் அடையும் நோக்கில் இவ்வாறு அவர்கள் தெரிவித்திருப்பது 121, 153ஏ, 505, 34 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகும். எனவே, இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை திறந்து வைக்க இருக்கிறார். இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், துறை செயலாளர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர் விழாவுக்கு அழைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ள எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.