வெளிநாடுகளில் இருந்து தனக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
பாஜகவை சேர்ந்தவர் நடிகர் எஸ்வி சேகர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் இவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், நகைச்சுவை கலைஞராகவும் திகழ்ந்தவர். தொடர்ந்து மேடை நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். சினிமாவைத் தொடர்ந்து அரசியலுக்குள் நுழைந்த அவர், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் அங்கம் வகித்தார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த எஸ்வி சேகர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். 2000 ரூபாய் நோட்டில் சிப் இருப்பதாக இவர் தெரிவித்த கருத்து தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதேபோல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை பேஸ்புக்கில் இவர் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கட்சி, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த எஸ்வி சேகர், அண்மையில் தமிழ்நாடு பாஜகவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலை தொடர்ந்து மீண்டும் அரசியல் பேசத் தொடங்கி இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நேரடியாகவும் மறைமுகமாக டுவிட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தொலைக்காட்சி, யூடியூப் சேனல் நேர்காணல்களிலும் அண்ணாமலை மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை இவர் முன்வைக்க தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில்தான் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக எஸ்வி சேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கும் நடிகர் எஸ்வி சேகர் தனக்கு தொலைபேசி மூலமாக வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவித்து உள்ளார். ராமலெட்சுமி என்பவர் வெளிநாட்டில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.