மார்பிங் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் போட்டோ: பஜ்ரங் புனியா கண்டனம்!

டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகள் குறித்த மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இந்த புகைப்படத்தை பகிர்ந்து கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் போராடி வருகிறார்கள். பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரணுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக எம்பி பிரிஜ் பூஷன் இருந்த போது தங்களுக்கு இழைத்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இவர்கள் போராட்டங்களை செய்து வருகிறார்கள். தனக்கு எதிரான அனைத்து புகார்களையும் பிரிஜ் பூஷன் மறுத்துள்ளார். அதோடு, தனக்கு எதிராக பொய்யாக, பாஜகவிற்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று புகார் வைக்கப்படுவதாக பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இவர் மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த சமயத்தில் பல பெண்களை குறிப்பாக இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் மீது வீராங்கனைகள் வைத்துள்ளனர். சங்கீதா போகட், சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட இந்தியாவின் டாப் வீராங்கனைகள் இங்கே போராட்டம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பஜ்ரங் புனியா போன்ற வீரர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வீரர், வீராங்கனைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா போன்ற முன்னணி மல்யுத்த வீரர்கள் புதிய நடாளுமன்றத்தை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயன்ற போது கைது செய்யப்பட்டனர். ‘மகாபஞ்சாயத்து’ நடத்துவதற்காக புதிய நாடாளுமன்ற திறப்பு விழா அன்று நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி செல்ல முயன்றபோது சட்டம் ஒழுங்கை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்ட போது சம்பவ இடத்தில் பெரிய களேபரமே நடைபெற்றது. ஜந்தர் மந்தர் போராட்ட தளத்தில் வினேஷ் போகட், சங்கீதா போகட்மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் போலீசா கடுமையாக தாக்கி தரையில் தள்ளி அதன்பின் கைது செய்தனர். முகம் முழுக்க வருத்தத்துடன், கண்ணீர் மல்க வீராங்கனைகள் அழுதுகொண்டே தரையில் கிடந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மல்யுத்த வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டதால் ஜந்தர் மந்தர் பகுதியே போர்க்களமானது. தரையில் இவர்களை தரதரவென இழுத்து சென்று போலீஸ் வண்டியில் ஏற்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை வேண்டும் என்று போராட்டம் செய்பவர்களை.. அதிலும் ஒலிம்பிக், ஆசிய போட்டிகளில் இந்தியாவிற்காக அடியவர்களை அரசு இப்படி மோசமாக நடத்தியது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட பின்பு சிரித்ததாக போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. வெளியே அழுது கொண்டு இருந்தவர்கள் வேனிற்கு உள்ளே சிரித்துக்கொண்டு இருந்ததாக போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த போட்டோ முழுக்க எடிட் செய்யப்பட்டது ஆகும். சோகமாக இருக்கும் வீரர், வீராங்கனைகளை டீப் பேக் மூலம் எடிட் செய்து இவர்கள் ஏமாற்றி உள்ளனர். போராளிகளுக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதமாக இந்த போட்டோ பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்த எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும், உண்மையான புகைப்படத்தையும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், “ஐடி செல் ஆட்கள் இந்த பொய்யான படத்தை பரப்புகிறார்கள். இந்த போலி படத்தை வெளியிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்படும்” என்று பஜ்ரங் புனியா டுவீட் செய்துள்ளார். அவரின் இந்த டுவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது. மல்யுத்த வீராங்கனைகள் மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.