ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்!

உக்ரைன் போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் போரை ஆரம்பித்தது. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவுடன் இணைய ஆர்வம் காட்டிய நிலையில், இந்த போரை ஆரம்பித்தது. இருப்பினும், முதலில் இதைப் போர் எனக் குறிப்பிட்ட மறுத்த ரஷ்யா இது தனது எல்லையைக் காக்கும் ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறி வந்தது. முதலில் சில வாரங்களில் இது முடியும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், உக்ரைன் வீரர்கள் காட்டிய உத்வேகத்தால் ரஷ்யாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. மேலும், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளும் இந்தப் போரில் உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் தேவையான ஆயுதங்களையும் சப்ளை செய்தது. இந்தப் போரின் போக்கை மாற்ற இதுவே முக்கிய காரணமாகும். அதன் பின்னர் ரஷ்யா கைப்பற்றிய இடங்களைக் கூட உக்ரைன் மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. உக்ரைன் போர் கடந்த 15 மாதங்களாகத் தொடரும் நிலையில், இன்னும் போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் குறிவைத்து உக்ரைன் இன்று காலை திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக மாஸ்கோவில் சில மைனர் சேதங்கள் ஏற்பட்டதாகவும் இருப்பினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தன. மாஸ்கோவை நோக்கி வந்த அனைத்து டிரோன்களும் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், “அதிகாலை நடந்த தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த டிரோன் தாக்குதல் காரணமாகப் பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், கொஞ்ச நேரத்தில் அவர்கள் மீண்டும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை நடந்த இந்த டிரோன் தாக்குதலால் பல கட்டிடங்களில் மைனர் சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மாஸ்கோவை நோக்கி வரும் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும் வீடியோவையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் வேறு எந்த பெரிய பாதிப்பும் இல்லை.மாஸ்கோவில் உள்ள விமான நிலையம் கூட வழக்கம் போலவே இயங்கியது. உக்ரைன் அனுப்பிய டிரோன்களை சுட்டு வீழ்த்தும் போது, அது விழுந்தே சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 25 டிரோன்கள் மாஸ்கோவை நோக்கி வந்ததாகவும் அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நேற்று திங்கள்கிழமை ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கிருந்த மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் இந்த டிரோன் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.