மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

டெல்லி: மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான ஒன்றிய அரசின் அவசர சட்டத்திற்கு நிராகரிக்க ஆதரவு கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி வரும் ஒன்றிய அரசு, அதற்கேற்ப அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பித்தது. இதற்கு எதிராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார்.
மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அவர் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யெச்சூரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவசர சட்டத்தை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஒன்றிய அரசின் செயல் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும் யெச்சூரி கண்டனம் தெரிவித்தார். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் இந்த விவகாரத்தில் காங்கிரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று யெச்சூரி கேட்டுக் கொண்டார்.