அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும்; வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதமும், 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிவிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும்; பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மே மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஓர் அறிவிக்கைக் கூட வெளியாகவில்லை.
அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை கடந்த சில ஆண்டுகளாகவே நிரப்பப்படாததால் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து ஒரு வாரத்திற்குள் அரசு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு இணையாகக் கூட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது தமிழ்நாட்டு அரசு பள்ளிகளின் கல்விச் சூழலை சீரழிக்கும். எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.