அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கனல் கண்ணன்!

அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்ட கருத்துக்காக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, கடுமையான வார்த்தைகளால் அமைச்சரை திட்டிய நிலையில், இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், அநாகரிகமான வார்த்தைகளால் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி 28ந் தேதி திறந்து வைத்தார். நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் தான் ஜனநாயகத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் எனக் கூறி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். மேலும், நாடாளுமன்ற திறப்பு நிகழ்வின்போது இந்து மதம் சார்ந்த பூஜைகள் செய்யப்பட்டதும், பிரதமர் மோடி தனக்கு வழங்கப்பட்ட செங்கோலுக்கு முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியதும் விமர்சங்களுக்கு உள்ளானது. இந்து மதத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்ட பூஜைகள் தொடர்பாகவும், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடி செங்கோலுக்கு முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியது தொடர்பான புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்ட தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் “மூச்சு இருக்கா?? மானம்?? ரோஷம்??” எனக் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, அமைச்சரை ஒருமையில் குறிப்பிட்டு காட்டமாக பதில் அளித்தார். திமுக அமைச்சரை தகாத வார்த்தைகளில் பேசிய அமர் பிரசாத் ரெட்டியை, திமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்து முன்னணி கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் கனல் கண்ணன், மிகக் கடுமையான வார்த்தைகளால் அமைச்சர் மனோ தங்கராஜை விமர்சித்துள்ளார். கடுமையான வார்த்தைகளால் மனோ தங்கராஜை விமர்சித்துள்ள கனல் கண்ணன், பிரதமரை தவறாகப் பேசியதற்காக மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜின் டுவீட்டை தொடர்ந்து, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியும், இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணனும், கடுமையாக அநாகரீகமான வார்த்தைகளால் சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, மனோ தங்கராஜ், பிரதமர் மோடி படத்துடன் தான் பதிவிட்ட டுவீட்டை நீக்கியது குறிப்பிடத்தகக்து.