முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. வெளிநாட்டு பயணம் இந்த நிலையில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளை சேர்ந்த தொழில் துறையினரை சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இரு நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அப்போது அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 26-ந் தேதி ஜப்பான் சென்றார். அங்கு 5 நாட்கள் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த சுற்றுப்பயணத்தில் அவரது முன்னிலையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சிங்கப்பூரை சேர்ந்த 6 நிறுவனங்களுடனும், ஜப்பானில் 7 நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
பல்வேறு நிறுவனங்களுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3,233 கோடிக்கும் மேல் முதலீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல், அந்த நாடுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையையும் முடித்துள்ளார். அந்த வகையில் இந்த இரு நாடுகளில் மேற்கொண்ட 9 நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேற்று காலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். டோக்கியோவில் அவரை ஜப்பான் நாட்டுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் வழி அனுப்பிவைத்தார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
உங்கள் வாழ்த்துகளோடு நான் மேற்கொண்ட சிங்கப்பூர் – ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. அந்தப் பயணத்தைப் பற்றி சுருக்கமாக உங்களுக்கு சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும், கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்லுறவை பெறக்கூடிய வகையில் இந்தப் பயணம் அமைந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டங்களான மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் ஜப்பானின் பங்கும் அதில் இருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
உற்பத்தித் துறையில் உலகிற்கே முன்னோடியாக விளங்குவது ஜப்பான் நாடு. அதே நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரும் உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது தான் திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய குறிக்கோள். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்த்திடக்கூடிய வகையில் ஏற்கனவே மாண்புமிகு தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்களும் ஜப்பான் நாட்டிற்குச் சென்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தினார். குறைந்தபட்சம் 3000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம். அந்த வகையில், முந்தைய தொழில்துறை அமைச்சர் நம்முடைய தங்கம் தென்னரசு அவர்களும், இன்றைய தொழில்துறை அமைச்சராக இருக்கக்கூடிய டி.ஆர்.பி. ராஜா அவர்களும் , தொழில்துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட்டு, பல ஜப்பான் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதில் முக்கிய திட்டமாகிய, 1891 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழிற்சாலையை மிட்சுபிஷி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே சென்னையில் என் முன்பு கையெழுத்திடப்பட்டது.
அதையொட்டி, ஹை-பி நிறுவனம் – 312 கோடி ரூபாய், டைசெல் நிறுவனம் – 83 கோடி ரூபாய், கியோகுட்டோ நிறுவனம் – 113.9 கோடி ரூபாய், மிட்சுபா இந்தியா – 155 கோடி ரூபாய், பாலிஹோஸ் டோஃபில் – 150 கோடி ரூபாய், பாலிஹோஸ் கோஹ்யேய் – 200 கோடி ரூபாய், பாலிஹோஸ் சட்டோ-ஷோஜி – 200 கோடி ரூபாய், ஓம்ரான் ஹெல்த்கேர் – 128 கோடி ரூபாய் – என மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு நான் உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவை மட்டுமல்லாமல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர்கல்வித் திறன் பயிற்சிக்கும் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பல்வேறு துறைகளுடைய பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்த தொழிற்சாலைகள் தூண்டுகோலாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும் சிங்கப்பூரிலும், ஜப்பானில் ஒஸாகா நகரத்திலும், டோக்கியோ நகரத்திலும் இருக்கக்கூடிய பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களினுடைய தலைவர்களையெல்லாம் சந்தித்தேன். சிங்கப்பூர் நாட்டினுடைய சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரையும், தொழில் வர்த்தகத் துறை அமைச்சரையும் சந்தித்து தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்தும், இந்தியாவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதையும் நான் எடுத்துரைத்திருக்கிறேன். இந்தச் சந்திப்பின்போது, மேலும் பல முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மிகவும் முனைப்போடு இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. மேலும் தொடர்ந்து முயற்சி செய்து, இந்த நிறுவனங்களின் தொழில் முதலீடுகளையும் தமிழ்நாட்டுக்கு ஈர்த்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தொழில்துறை அமைச்சரையும், தொழில்துறை அலுவலர்களையும் நான் வலியுறுத்தியிருக்கிறேன். இதையொட்டி, வருகிற 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் நீங்களெல்லாம் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். இந்த அழைப்பினை ஏற்று பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் அதில் கலந்து கொள்வதாக உறுதி தந்திருக்கிறார்கள். இந்த மாநாட்டை சிறப்பாக நம்முடைய தமிழக அரசு நடத்த இருக்கிறது என்பதையும் உங்கள் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அப்போது முக ஸ்டாலினிடம், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், “இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமாக பதில் அளித்திருக்கிறார். அதை நானும் படித்து பார்த்தேன். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்” என்று தெரிவித்தார்.