சீமான், திருமுருகன் காந்தி டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: காவல்துறை விளக்கம்!

நாம் தமிழர் கட்சியின் சீமான், மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை முடக்க நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என சென்னை காவல் துறை விளக்கமளித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முதல் போட்டியிட்டு வருகிறார். அவருடைய கட்சியில் ஆண், பெண் சமம் என்பதால் வேட்பாளர்களிலும் 50 சதவீதம் ஆண்களுக்கு 50 சதவீதம் பெண்களுக்கு என இருக்கும். இதுவரை இந்த 7 ஆண்டுகாலத்தில் யாருடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததில்லை. ஆனாலும் அதன் வாக்கு வங்கி மெச்சும் அளவுக்கு உள்ளது. இனி வரும் தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளை அவ்வப்போது விமர்சனம் செய்து வருவார். அது போல் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைப்பதை கடுமையாக கண்டித்த சீமான் மீறி சிலை வைத்தால் அந்த பேனாவை உடைப்பேன் என்றார். அது போல் மக்கள் நல பிரச்சினைகளுக்கும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுப்பார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென சீமானின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கு பக்கத்தில் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அது போல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்துவதற்கு முதலில் குரல் கொடுத்தது நாங்கள் தான், எனவே தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு பதக்கம் வாங்கி கொடுத்த வீராங்கனைகளை தெரிவில் நிற்க வைத்தது குறித்து கேள்வி கேட்டதற்காக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது டுவிட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி சந்தோஷம் தான். ஆனால் என்னுடைய குரலை யாராலும் முடக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்திருந்தார்.

மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தியின் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. இவரும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பார். இவர்களது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சீமான், திருமுருகன் காந்தியின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம் குறித்து சென்னை மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளான சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை முடக்க நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் சென்னை காவல் துறை பரிந்துரையின் பேரில்தான் சீமான், திருமுருகன் காந்தியின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.