அண்ணாமலை ஒரு கோழை: அண்ணாமலை குறித்து சர்ச்சை வீடியோவுடன் காயத்ரி ரகுராம் பதிவு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடியில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த வேளையில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, 1930ல் பாஜக அப்படி இருந்தது. இப்படி இருந்தது என கூறி வருகின்றனர். பாஜக அனைவருக்கும் சொந்தமான கட்சி. அதனை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. இந்த கட்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒருவர், 2 பேரால் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பாஜக கட்சி இல்லை. இது ஒரு காட்டாற்று வெள்ளம் என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பெல்லாம் முடிந்த பின்னர் மைக் எல்லாம் செய்தியாளர்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த பாஜக நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் அப்போது ஒரே பெண்ணை இருவர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் மனுஷனாக இருக்கவே தகுதியில்லை என்பது போல் அண்ணாமலை பேசியதாக ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம்.. “மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் படுக்கையறையையும் எட்டிப்பார்ப்பது அரசியலா? யாருடன் இருக்கிறாரோ, யாரை வைத்துக்கொண்டு யாருடன் தூங்குகிறார்களோ, இது அவருடைய மலிவான அரசியல். என்ன ஒரு கெட்ட வாய், கெட்ட மனம். அண்ணாமலை பேசும் போது பெண்ணைப் பற்றியும் மோசமாகப் பேசுகிறார். சொந்தக் கட்சிக்காரர்கள் குறித்தும் இப்படித்தான் கருத்துகளை பேசுகிறார். உண்மை தெரியாமல் அவரை ஜட்ஜ் செய்து கொள்கிறார். அண்ணாமலை முழு அழுக்கு மற்றும் மோசமான குற்றவாளி. அண்ணாமலை முற்றிலும் மோசமானவர் மற்றும் கண்ணியம் இல்லாதவர். கிசுகிசு பேசுவதற்கு வேறு வேலை இருக்கிறது. மேனேஜர் அவருக்கு சரி, தலைவர் அல்ல. கடந்த டிசம்பரில், நான் இல்லாதபோது, ஒரு கூட்ட அரங்கில் 150 பேர் முன்னிலையில் அவர் என்னிடம் அதையே செய்தார். அண்ணாமலை ஒரு கோழை” இவ்வாறு கடுமையான பதிவினை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார்.